நீதிமன்ற விசாரணை குறித்து கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் ஆகியோர் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி விடுவித்தது. இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்டோர் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவுக்கு கடிதம் எழுதினர்.
கேஜ்ரிவால் தனது கடிதத்தில், “சிபிஐ மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதால் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகப் போவதில்லை. இதற்கான விளைவுகளை சந்திக்கத் தயாராக உள்ளேன். விடுதலையை ரத்து செய்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, “இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நபர்கள் உயர் நீதிமன்ற விசாரணை குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.இதையடுத்து கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.







