மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரவசத்தில் பிறந்தவர்கள் எனக் கூறியதற்காக மன்னிப்புக் கோரினார் இயக்குநர் கே.பாக்யராஜ்.!!

இயக்குநர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரவசத்தில் பிறந்தவர்கள் எனக் கூறியதற்காக மன்னிப்புக் கோரினார்.

புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் இருக்கிறது? வெளிநாடு சென்றுவந்தவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பார்கள்.

ஆனால் பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவந்ததும் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி என்றால் உடனடியாக வந்துவிடுவார். அவர் ஓய்வின்றி உழைக்கிறார். அவரது உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறார். எந்த பிரதமரால் அவரைப் போல சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இந்தியாவுக்கு இப்படி ஒரு சக்திமிக்கவர் வேண்டும்.

பிரதமர் பதவியிலிருக்கும்போது இக்கட்டான சூழ்நிலைகள் வரும். இப்படி பேசினால் ஒருவருக்கு பிடிக்காது, அல்லது மற்றொருவருக்கு சாதகமாக இருக்கும். விமர்சனம் செய்கிறவர்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருப்பார்கள். பிரதமர் மோடி விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்.

விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு 4வது மாதம்தான் காது உருவாகும், 5வது மாதம் வாய் உருவாகும். விமர்சனம் செய்கிறவர்களை 3 மாசத்தில் பிறந்தவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதை இவனும் பேச மாட்டான். பிறர் சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது, நான் பேசியது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்பதாகவும் திராவிட தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால் நான் பாஜகவைச் சேர்ந்தவன் இல்லை என்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.