ஒரு அரசு ஊழியர் போல் தலைமை செயலகம் வந்து வேலை செய்யும் விஜய்!

தமிழகத்தின் முதல்வராக 10 ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், 11 ஆம் தேதி முதல் தொடர்ந்து சட்டசபைக்கு வந்து செல்கிறார். அங்கு அவர் அரசு ஊழியர்கள் போல் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வந்து அங்கேயே சாப்பிடுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். இதில் காங்கிரஸ் மட்டும் அமைச்சரவையில் இடம் தர கேட்டதாக சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.இந்த நிலையில் பதவியேற்றது முதலே கருப்பு நிற கோட் சூட்டுடன் தலைமைச் செயலகத்திற்கு விஜய் வந்து செல்கிறார். கடந்த 11 ஆம் தேதி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்காக தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் சபாநாயகர் பதவிக்கு ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகர் பதவிக்கு ரவிசங்கரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விஜய் முன் மொழிந்தார். இந்த நிலையில் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 12 ஆம் தேதி சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இடைக்கால சபாநாயகர் கருப்பையா அறிவித்தார்.இதையடுத்து ஜேசிடி பிரபாகரை அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையை பிடித்து அழைத்து வந்து உட்கார வைத்தனர். அப்போது ஜேசிடி பிரபாகருக்கு பாராட்டு தெரிவித்து கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் பேசினர். கடைசியாக முதல்வர் ஸ்டாலின், சபாநாயகரின் கையை பிடித்து இழுத்து வந்து அமர வைப்பதன் கதையை சொல்ல சொல்ல, சபாநாயகர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி தவெக அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் அந்த அரசுக்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது. இதன் மூலம் இந்த தீர்மானத்தில் அந்த அரசு வெற்றி பெற்றதை சபாநாயகர் அறிவித்திருந்தார். அன்றைய தினம் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பதவியேற்றது முதல் இன்று வரை விஜய், அரசு ஊழியர்களை போல் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். பதவியேற்பு விழாவுக்கு காலை 8.48 மணிக்கெல்லாம் நேரு ஸ்டேடியத்திற்கு வந்துவிட்டார். அடுத்த நாள் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவுக்கு காலை 9.30 மணிக்கு நடக்கும் நிகழ்வுக்கு காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு வந்துவிட்டார். அடுத்த நாள் சபாநாயகர் தேர்தலின் போது 9.30 மணிக்கு அவை தொடங்கிய நிலையில் அவர் 8.55 மணிக்கெல்லாம் சட்டசபைக்குள் வந்தார்.

அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது காலை 9.30 மணிக்கு அவை தொடங்கிய நிலையில் விஜய் 9 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு வந்துவிட்டார். நேற்றைய தினமும் காலை 9.55 மணிக்கு முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்தார். மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்திலேயே இருந்தார்.

நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை, திமுக அரசின் பழைய திட்டங்களை தொடர்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்திற்கு வரும் போது விஜய் மதிய உணவையும் கொண்டு வந்துவிடுகிறாராம்.

ஒரு அரசு ஊழியர் போல் அவர் அங்கேயே அமர்ந்து மதிய உணவையும் சாப்பிட்டார். விஜய்யின் இந்த செயல்களை பார்த்து தலைமைச் செயலக ஊழியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே பதவியேற்பு விழாவில் அங்கிருந்த டேபிளை விஜய் தூக்கி கொண்டு சென்றது தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

விஜய் தனது உணவாக பின்வரும் வகையில் உட்கொள்கிறார் என தகவல் கிடைத்தது.

காலையில் இட்லி, முட்டை, பழங்கள் மற்றும் உடனடி ஆற்றல் தரும் இளநீர்.

மதியத்திற்கு அரிசி சாதம், காய்கறிகளுடன் புரதச்சத்து நிறைந்த சிக்கன் அல்லது மீன்.

இரவிற்கு எளிதில் செரிமானமாகக் கூடிய சூப், சாலட் அல்லது மிக லேசான உணவுகள்.