இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவ்வப்போது மீறப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக பல்வேறு நாடுகளில் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் இந்த நெருக்கடியை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து என்னென்ன சூழல்களில் நாட்டு மக்களுக்கு சாதகமான பயன் தரத்தக்க முடிவுகளை எடுக்கலாம் என்பது குறித்து கண்காணித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீதை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமாக கருதப்படும் ஹார்முஸ் ஜல சந்தி எப்போதும் எந்தவித தடைமின்றி திறந்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் எரிவாயுவை இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் விநியோகிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஏற்படுத்தி உள்ளார். இதேபோன்று இந்தியாவிலேயே எரிபொருளை உற்பத்தி செய்யும் நடவடிக்கையின் தொடக்கமாக இந்தியாவில் பெட்ரோலிய மூலங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அமீரகத்துக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







