சனாதன தர்மத்திற்கு மட்டும் எப்போதும் அழிவே இல்லை… அண்ணாமலையின் ஆன்மிக பேச்சு..!!

திருப்பூர்: ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய சில கருத்துகள் பேசுபொருள் ஆகியுள்ளது.

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அரண் பணி அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வில் கலந்து கொண்ட பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆன்மீக போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் பேசிய அவர், “கடந்த 20 ஆண்டுகளாக புதியதாக ஒரு கும்பல் கிளம்பி உள்ளது. அவர்கள் ஆன்மீகத்திற்கே ஆதாரம் கேட்கிறார்கள்.

சனாதனம் பற்றி எல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.. ஒன்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.. சனாதன தர்மத்திற்கு மட்டும் எப்போதும் அழிவே கிடையாது.. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகச் சனாதன தர்மம் பற்றி ஒரு கும்பல் தொடர்ந்து திரித்துக் கூறி பொய் கூறி வருகிறார்கள்.. சனாதன தர்மத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை.. எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை.

இந்த பாரத நாட்டில் 5000 ஆண்டுகளாகச் சனாதன தர்மம் உள்ளது.. ஆனால் குறிப்பிட்ட சிலர் கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில் இதை எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். பழமையான சனாதனத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான் இந்த பாரத நாட்டின் காவலனாக இருக்க முடியும்.. பிரதமர் நரேந்திர மோடி அப்படித்தான் இருக்கிறார். சிவனடியார்கள் போல என்னால் இருக்க முடியவில்லை.

நான் சத்திரயனாக இருக்கிறேன். எந்தப் பிரச்சினையையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் துணிவும் ஆற்றலும் எனக்கு இருக்கிறது. ஒரு கண்ணத்தில் அறைந்தால் மற்றொரு கண்ணத்தைக் காட்டும் நிலையில் நான் இல்லை” என்று அவர் பேசினார். சனாதன தர்மம் குறித்துக் கடந்த சில நாட்களாகவே பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை இப்படிப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அப்படித்தான் திருப்பூரில் ஜெய் நகர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரபு வீட்டில் கல் வீசி தாக்கப்பட்டு இருந்தது. ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரபு வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை அவரிடம் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “போலீசார் தங்கள் முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும். தமிழ்நாடு போலீசார் தனது நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.. உரியக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இதுபோல அடுத்தடுத்து குற்றங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்..