வீட்டு வசதி வாரிய கட்டிடங்களை தனியாருடன் இணைந்து கட்ட முடிவு- அமைச்சர் முத்துசாமி தகவல்.!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பதிலளித்து பேசியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனை ஆகாமல் இருக்கிற வணிக அலகுகள் 1,082 ஆகும்.

விற்பனை ஆகாமல் இருக்கும் குடியிருப்புகள் 3,505, மனைகள் 5,074 ஆகும். மக்களுடைய எதிர்பார்ப்பை கணக்கிட்டு அவற்றை தரமாக கட்ட வேண்டும். ஆனால் அவற்றை கணக்கிடாமல் கட்டியதால் அவை தற்போது அரசுக்கு சுமையாக உள்ளன. டெண்டர் விட்டு கட்டிட கட்டுமானம் செய்வோரை தேர்வு செய்தால், அவர்கள் எந்தத் தரத்தில் கட்டுகிறார்கள் என்பதை கண்காணிக்க முடிவதில்லை. எனவே இனி கட்டப்படும் கட்டிடங்களை தனியாருடன் இணைந்தே (ஜாயிண்ட் வெஞ்சர்) கட்டலாம் என்று நினைக்கிறோம்.

அவர்கள் கட்டுவதில் ஒரு பகுதி அரசுக்கு வரும். மீதமுள்ள பகுதி அவர்களிடம் இருக்கும். கட்டுமானத்திற்காக நாம் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். அவர்களிடம் இருக்கும் வீடுகளை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி வரும்போது, அவர்கள் வீடுகளை தரமாகக் கட்டியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். ஒருவேளை அரசுக்கு அவர்கள் தரும் பங்கில் உள்ள வீடுகளை கட்டுமானம் செய்தவருக்கு அரசு கொடுத்தால், அதில் ஒரு லாபம் வைத்து அதை அவர்கள் விற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு ஷரத்தையும் அதற்கான ஒப்பந்தத்தில் சேர்க்க இருக்கிறோம். எனவே கட்டுமானத்தில் தரக்குறைவு ஏற்படாது. இதை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.