ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கோவாவில் தொடங்கியது-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வருகை

னாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார்.

கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்ட அவர் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, ‘தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியாவுக்கு சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

கடந்த 2011-ம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வந்தார். அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியாவுக்கு செல்கிறார் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் உள்ளிட்டோரும் கோவாவுக்கு வந்துள்ளனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாங் மிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோவாவில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது ஜெய்சங்கர் பேசும்போது, ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது. இந்த காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவம், இளைஞர் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அலுவல் மொழியாக ரஷ்ய மொழியும், சீனாவின் மாண்டரின் மொழியும் உள்ளன. இந்த அமைப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ரஷ்ய மொழி, மாண்டரின் மொழிகளில் மட்டுமே உள்ளன. இந்த சூழலில் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட இருக்கிறது.

தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே டாலர் கரன்சியில் பணப் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதற்குப் பதிலாக அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.