கோவை பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.!!

கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,018 இடங்களில் 396 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி, ஒரு பிங்க் வாக்குச்சாவடி, ஒரு இளம் தலைமுறை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. மாதிரி வாக்குச்சாவடிகளில் ஜன்னல்களுக்கு திரை சிலைகள் கட்டப்பட்டு இருக்கும் மேலும் வண்ண பலூன்கள் கொண்டு அந்த வாக்குச்சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

கோவை மாவட்டத்தில் உள்ள 396 வாக்குச் சாவடிகளில் 347 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. கோவை கோட்டைமேடு, மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி உக்கடம், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதில் ஒரு கேமரா வாக்குச்சாவடி உள்ளே நடப்பதையும் மற்றொரு கேமரா வாக்களிக்க வரிசையில் நிற்கும் பொதுமக்களை கண்காணிக்கும் வகையிலும் பொருத்தப்படுகிறது. மேலும் வாக்குப் பதிவு நாளில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் பதிவாகும் நிகழ்வுகள் அனைத்தும் நேரலை மூலம் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்படுகிறது. கோவையில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாக்குச் சாவடிகள் முன்பு பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இது தவிர பொதுமக்கள் நின்று கொண்டு இருக்காமல் அவர்கள் அமர்வதற்கு வசதியாக வாக்குச் சாவடிகளில் இருக்கை போடப்பட்டு உள்ளன.