கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார்… பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டம்..!

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பி நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேறாமல், நள்ளிரவு 2 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சக்கரவர்த்தி தலைமையிலான, 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பாலியல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் காவல்துறையினர் முன்னிலையில் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவிகள் போராட்டதை கைவிட்டனர். மேலும் விடுதி மாணவிகள் இரண்டு நாட்களில் கல்லூரி விடுதியை காலி செய்ய வேண்டும் என பிறபிக்கப்பட்ட உத்தரவும் திரும்ப பெறப்பட்டது.