வெற்றிகொடிக்கட்டு பட பாணியில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 150 க்கும் மேற்பட்டவர்களிடம் நூதன மோசடி – கோவையில் நிறுவன மேலாளர் கைது..!

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து நூதன முறையில் மோசடி செய்த சம்பவத்தில் நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும் அதில் சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், சூப்பர்வைசர், ஓட்டுநர், மேலாளர், போன்ற பணியிடங்கள் உள்ளதாகவும் தமிழ்நாடு முழுவதும் பதாகைகள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல செய்தித்தாள் மற்றும் இணையதளங்களிலும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த இளைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வடவள்ளியில் உள்ள எல்.எஸ் கன்ஸ்டிரக்சன் என்ற பெயரிலும் அஃப்போட் டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற பெயரிலும் செயல்படும் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.

இப்படி தொடர்பு கொண்டவர்களை அந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தலைமறைவாகியதுடன் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

மேலும், விமான பயண சீட்டுகளையும் வழங்கிவிட்டு, கடந்த 8ம் தேதி சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்துவிட்ட பின்னர், சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக தெரிவித்த அந்த நிறுவனத்தார் திடீரென தகவல் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டனர்.

பணத்தை கொடுத்தவர்கள் போன் செய்தும் நிர்வாகிகள் எடுக்காமல் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்தனர். இதனார், சந்தேகம் அடைந்தவர்கள் நேரில் வந்து பார்த்தபோது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் குற்ற பிரிவு போலீசார் மோசடி செய்து தலைமறைவாக இருந்த மோசடி ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி, மேலாளர் மோகன கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் சரண்யா , ஜோதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாகியிருந்த நிறுவனத்தின் மேலாளர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகிவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து தலைமுறைவாகியுள்ள மூன்று பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.