முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது. இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் :அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்.!

சென்னை : சென்னை எழும்பூரில்18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இலவச பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்கு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,’தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் அதனை இலவசமாக போட ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தடுப்பூசி போடும் பணி இயக்கமாக மாறியது.

வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தன வீடுகளை தேடி சென்று தடுப்பூசி போடப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசம் 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 31 மெகா தடுப்பூசி முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 95% பேரும் 2ம் தவணை தடுப்பூசி 87% பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 11.63 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 2,590 இடங்களில் அரசு கோவிட் தடுப்பு மையங்களில் முதல் தவணை, 2ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மெகா தடுப்பூசி முகாம் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,’என்றார்.