விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து நேர்ந்தது எப்படி..?
இந்நிலையில், விபத்து நேர்ந்த இடத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். காகிதக் குழாய்கள், அட்டைகளைச் சேமித்து வைக்கும் குடோனில், 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே அறையில் அமர வைத்துப் பாதுகாப்பற்ற சூழலில் பணி செய்ய வைத்ததால் உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ரசாயன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததும் அம்பலமாகியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு விதிமீறல் காரணமாக இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்து தொடர்பான விசாரணைக்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.








