நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை- மத்திய பாஜக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என ஒரு பெரும் பட்டியலை மத்திய பாஜக அரசு வெளியிட்டது.

வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், நாடகம், கபட நாடகம், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் உள்ளிட்ட வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது மத்திய அரசின் உத்தரவு.

மத்திய பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சொற்களைத்தான் நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மத்திய அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என எந்த விதப் போராட்டங்களுக்கும் இனி அனுமதி கிடையாது; அதேபோல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக நாடாளுமன்றம் நடைபெறும் காலங்களில் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். தற்போது மத்திய பாஜக அரசு இதற்கு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இடதுசாரி எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் தமது சமூக வலைதளப் பதிவில், எம் பி கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எவ்வித போராட்டமும் நடத்தகூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான நேரடித்தாக்குதல். ஜனநாயக்கத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது என கொந்தளித்துள்ளார்.