மும்பை பந்த்ரா-வெர்சோவா கடல் இணைப்பு பாலத்துக்கு சாவர்க்கர் பெயர்… முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு..!

மும்பையின் மேற்குப் பகுதியில் வரவிருக்கும் பந்த்ரா-வெர்சோவா கடல் இணைப்புப் பாலத்துக்கு இந்துத்துவ தலைவரான சாவர்க்கரின் பெயர் சூட்டப்படும் என்றும், மத்திய அரசு வழங்குவதைப் போல மாநில அளவிலான வீரதீரச் செயல்களுக்கான விருதும் சாவர்க்கர் பெயரில் வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நேற்று சாவர்க்கரின் பிறந்தநாளில் தலைநகர் டெல்லியில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிலர் தங்கள் சுயநலத்திற்காக வேண்டுமென்றே சாவர்க்கரை அவதூறாகப் பேசுவதாகவும், அவரது சிந்தனைகள் சமூகத்தில் பரவினால் அவர்கள் தங்கள் கடையை மூடிவிட்டு கிளம்ப வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் இருப்பதாவும் கூறினார்.

முதல் முறையாக மாநில அரசால் கட்டப்பட்ட மகாராஷ்டிர சதானில் சாவர்க்கரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்று கூறிய அவர், “சாவர்க்கரின் சிந்தனைகள் சமூகத்தில் பிரபலமாகிவிட்டால், அவர்கள் தங்கள் கடை அடைக்க வேண்டியிருக்கும். சாவர்க்கரை விமர்சிப்பவர்களுக்குத் தெரியும். அவர் இறந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகும் சாவர்க்கரை எதிர்ப்பதில் அவர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்று பாருங்கள்” எனவும் கூறினார்.