கேக்கும் போதே நெஞ்சு பதறுகிறது… இது தான் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சியா..? வானதி சீனிவாசன் ஆவேசம்..!

குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பெற்றோர் அழுதபடி சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதற செய்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள அத்திமரத்து கொல்லை கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. சாலை வசதி இல்லாததன் காரணமாக தாமதமாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றபோது, சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெற்றோர் அழுது கொண்ட குழந்தையின் சடலத்தை தூக்கி சென்றனர். இதுதொடர்பான செய்தி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திராவிட மாடல் ஆட்சி என பெருமை பேசும் அரசின் அலட்சியம் கண்டிக்கதக்கது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாம்பு கடித்த குழந்தையை சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் செல்லும் வழியிலேயே குழந்தை உயிர் இழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்து திரும்பும் வழியில் சாலை வசதி இல்லை என்று கூறி ஆம்புலன்ஸ் இல் இருந்து இறக்கி விடப்பட்டு, 10 km தூரம் குழந்தையின் பெற்றோர் அழுதபடி குழந்தையை சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதறச் செய்கிறது. “திராவிட மாடல் ஆட்சி” என பெருமை பேசும் அரசின் அலட்சியம் கண்டிக்கதக்கது.

தமிழக அரசு , இக்குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு கிராமத்திற்கு சாலைவசதி ஏற்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.