போலந்து மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் … அவசர கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!

போலந்தில் நாட்டின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷியா இடையே போர் நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய போர் தொடுத்து வருகிறது. இதில் இரு நாடுகளில் பெருமளவில் உயிரிழப்புகள் நேர்ந்தன.

இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இருப்பினும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றது.

இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல நகரங்கள் மற்றும் கட்டடங்கள் ரஷிய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தன. இதில், பல நகரங்களை ரஷியாவின் பிடியில் இருந்து உக்ரைன் மீட்டது. இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் மீது ரஷிய ஏவுகணைகள் விழுந்துள்ளன.

இந்த சம்பவத்தில் போலந்து நாட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 16) ஜி7 நேட்டோ தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “போலந்து அதிபர் துடாவிடம் பேசியுள்ளேன். போலந்தில் மக்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். போலந்து மீது ரஷ்ய ஏவுகணை விழுந்தது பற்றிய விசாரணைக்கு போலந்துக்கு முழு ஆதரவை வழங்குவோம்” என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, போலாந்து மீது ரஷ்ய ஏவுகணை விழுந்தது குறித்து போலாந்து மற்றும் உக்ரைன் வெளியுறவு அதிகாரிகளிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் உரையாடி விசாரணைக்கு ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.