கோவையில் பார்மசி நடத்தி 1.80 கோடி நூதன மோசடி- உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை கணபதி மாநகரில் வசித்து வருபவர் வினோத் என்ற செல்லச்சாமி, (வயது35) இவர், ‘மெட்கியூர் பார்மசி’ என்ற பெயரில், கணபதி மாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.மொத்தமாக மருந்து வாங்கி, பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து, அதிக லாபம் ஈட்டி வருவதாகவும்,தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 10 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வட்டி தருவதாகவும்,
ஆசை வார்த்தை கூறினார்.
11 மாதங்கள் கழித்து, முதலீடு தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார்.இதை நம்பி, 2016 மார்ச் முதல் ஜூலை வரை 13 பேர், 1.80 கோடி ரூபாய் டெபாசிட் செய்தனர். ஆனால், டெபாசிட்தாரர்களுக்கு வட்டியும், முதலும் திருப்பித்தராமல் மோசடி செய்தனர்.
இது தொடர்பாக வினோத், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, வினோத்தின் தந்தை அண்ணாதுரை, மனைவி தெய்வப்பிரியா, தங்கை சரண்யா ஆகியோர் மீது, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு” செய்தனர். இவர்கள் மீது, கோவை ‘டான்பிட்’ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.85 கோடி அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அண்ணாதுரை இறந்து விட்டதால், அவர் மீதான விசாரணை கைவிடப்பட்டது. தெய்வப்பிரியா, சரண்யா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பின் போது, வினோத் ஆஜராகாததால் அவருக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.