தொட்ட பெட்டா மலை சரிவுகளில் பூத்து குலுங்கும் அழகிய ரோடோடென்ரன் மலர்கள்- கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!

நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது.

இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள்ளன.குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது.

மிகவும் உயரம் குறைந்த, அதிக கிளைகளை கொண்ட இந்த மரத்தில் ஆண்டு தோறும் பனிக்காலமான டிசம்பர் மாதங்களில் சிவப்பு நிற ரோஜா மலரை போன்ற மலர்கள் பூக்கும். தற்போது கால மாற்றத்தால் ஜனவரி மாதம் வரை இந்த பூக்கள் பூக்கிறது. அடர் சிவப்பு மற்றும் சில இடங்களில வெளிர் சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் காணப்படும்.பார்ப்பதற்கு ரோஜா மலர்களை போலவே காட்சியளிக்கும். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதனை ரோஜா மலர் என நினைத்து அருகில் சென்று பார்த்த பின்னரே ரோடோடென்ரன் மலர் என தெரிய வரும்.

இது நேபாளத்தின் தேசிய மலர், அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜீனியா மாநில மலர், இந்தியாவில் நாகாலாந்து மாநில மலர் , சீனாவில் ஜியாங்சி மாகாண மலர் மற்றும் இந்தியாவில் சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் மாநில மரம். இம்மரங்களின் பெரும்பாலான இனங்கள் பிரகாசமான வண்ண மலர்களைக் கொண்டுள்ளன, அவை குளிர்காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் ஆரம்பம் வரை பூக்கும்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, அவலாஞ்சி, அப்பர்பவானி, வெஸ்டர்ன்கேட்ச்மென்ட், பங்கிதபால், சைலன்வேலி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் உள்ள இந்த மரங்களில் ரோடோடென்ரன் மலர்கள் அதிகளவு பூத்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.