முன்னாள் தலைமை ஆசிரியையை கட்டிப் போட்டு 25 பவுன் நகை கொள்ளை – 2 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு.!!

கோவையை அடுத்த வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70) ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. திருமணம் ஆகாதவர். இந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார் .வீட்டை சுற்றிலும் அவரின் உறவினர்கள் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் விஜயலட்சுமி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 2 வாலிபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். உடனே அவர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி நீங்கள் யார் ?எதற்காக வீட்டுக்குள் வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. இதனால் அவர் சத்தம் போட முயன்றார். உடனே 2 பேரும் தாங்கள் வைத்திருந்து கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் கழுத்தில் வைத்தனர். சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துகொலை செய்து விடுவோம். என்று மிரட்டினர். இதனால் அவர் சத்தம் போடவில்லை .இதை யடுத்து அந்த 2 பேரும் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் வளையல் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவரை வீட்டில் இருந்த சேலையை எடுத்து நாற்காலியில் அமர வைத்து கட்டி போட்டனர் .அத்துடன் அவரை மிரட்டி பீரோ சாவியை வாங்கி அதிலிருந்து 15 பவுன் நகையையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து 2 பேர் ஓடுவதை அறிந்த அருகில் இருந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர் நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொள்ளையர்கள் அவரது கையில் இருந்த வளையலை பலவந்தப்படுத்தி கழட்டும்போது விஜயலட்சுமியின் கையில் சிறிய காயமும் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஒட்டி வருவதும், விஜயலட்சுமி வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை பையை வைத்தபடி மற்றொருவர் அந்த வாகனத்தில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த 2 பேர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பேரூர் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..