திருச்சியில் மூன்று மணி மண்டபங்கள்- முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில், பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், நீதிக்கட்சித் தலைவா்களில் ஒருவரான சா். ஏ.டி. பன்னீா்செல்வம், இசைக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, சிவ.வீ. மெய்யநாதன், கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் அ. செளந்திரபாண்டியன்ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, செ. ஸ்டாலின்குமாா், சீ. கதிரவன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்கத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நன்றி கூறினாா்.
இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது திருச்சி காவிரி பாலப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே திறக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மணிமண்டபங்கள் திறப்பு விழா நிகழ்வில் நேரில் பங்கேற்றுள்ளோம். இந்நிகழ்வின் முலம் இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளாா் என்றாா்.
மணிமண்டபங்கள் திறப்பு நிகழ்வில், 3 தலைவா்கள் தரப்பையும் சோந்த பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முக்கொம்பு மேலணை திறப்பு திருச்சி முக்கொம்பு மேலணையில், பழுதான அணைக்குப் பதிலாக புதிதாக கொள்ளிடம் ஆற்றில் ரூ.414 கோடியில் அமைக்கப்பட்ட புதிய அணை மற்றும் அணையுடன் கூடிய சாலையையும் முதல்வா் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். மணிமண்டப திறப்பு விழாவில் நான்கு தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.