நான் பாஜகவில் சேரப் போகிறேனா..? இதை சொன்னவரை செருப்பால் அடிப்பேன்… திருநாவுக்கரசர் எம்.பி. ஆவேசம்.!!

திருச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 150 படகுகள் மண்ணோடு மண்ணாகி உள்ளது. அதற்கான நட்ட ஈட்டு தொகையை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் விமர்சித்தார்.
பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி , காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக அதிக திட்டங்களை செயல்படுத்தியதாக கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவதில்லையென விமர்சித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ 4000 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆனால் மத்திய அரசோ ஒரு ரூபாய் கூட தரவில்லை என குற்றம்சாட்டினார். பிரதமரின் தமிழக சுற்றுப்பயணம் தேர்தல் ஸ்டண்டாக உள்ளதாகவும், இதனால் எந்த பயனும் இல்லையென கூறினார்.
திருச்சி தொகுதி திமுக அல்லது மதிமுகவிற்கு வழங்க இருப்பதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களுக்கான தொகுதியை கேட்க தார்மீக உரிமை உள்ளது. ஏற்கனவே நான் எம்பி ஆக உள்ளேன். எனக்கும் அந்த உரிமையுள்ளது என கூறினார். எம்.பியை கண்டா வர சொல்லுங்க என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் . நான் இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறேன். நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என பதில் அளித்தார். அப்பொழுது அந்த நிருபர் மூன்று வருடமாக பார்க்கவில்லை இப்பொழுது தான் பார்க்கிறேன் என்று அவரும் பதில் கூறவே பரப்பு ஏற்பட்டது.

அப்போது திருநாவுக்கரசர் நிருபர்களிடம் ஆவேசமாக பேசினார், நீ எத்தனை முறை என்னை பார்த்தாய் என்று ஒருமையில் பேசிய அவர், தொடர்ந்து நீ எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர், பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்கிறாயா  என்று ஆக்ரோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து திருநாவுக்கரசர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருவது குறித்த கேள்விக்கு?? பதில் அளித்த அவர், இதை சொன்னவன் எவனாக இருந்தாலும் செருப்பால அடிப்பேன்…இனி நானும் சீமானை போன்று பேசப் போகிறேன் என திருநாவுக்கரசர் ஆவேசமாக தெரிவித்தார்..