கோவையில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: உற்சாகமாக தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள்.!!

தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது.
பறக்கும் படை
இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 193 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் சென்று திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள். பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும் 10-ம் வகுப்பு தேர்வை 41 ஆயிரத்து 811 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 141 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 2,917 தனித்தேர்வர்களும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணியில் 3,800 பேர் ஈடுபடுகின்றனர்.
முக கவசம்
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்வு அறைகளில் உள்ள மேஜைகளில் மாணவர்களின் பதிவு எண் எழுதப்பட்டு உள்ளது.
இன்று தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்கள் கட்டாயம் சீறுடையில் தான் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்ல வசதியாக அவர்களது தேர்வு எண் பள்ளி முன்பு உள்ள கரும்பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தந்த அறையின் முன்பும் ஒட்டப்பட்டு இருந்தது.
10 மணிக்கு
தேர்வு அறைக்கு செல்லும் போது மாணவர்களுக்கு கிருமி நாசினி கொடுக்கப்பட்டு தர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு உள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு 10 மணிக்கு தொடங்கி 1.15 வரை நடக்கிறது. அதனால் ஆசிரியர்கள் , மாணவர்களை பள்ளிக்கு காலை 9 மணிக்கே வர அறிவுறுத்தினர். 9.15 வரை வராத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போன் செய்து அவர்கள் எங்கு உள்ளார்கள், பதட்டம் இல்லாமல் சீக்கிறம் வர கூறினர்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் வாட்ச், பெல்ட்டு அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை கொண்டு வரும் மாணவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்வு முடிந்த பின்னர் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
காலணிகள் தேர்வு அறைக்கு முன் அகற்றி வைக்க அறிவுறுத்தப்பட்டது. அறைக்கு இன்க்பென், ஸ்கேல், பென்சில் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.