என் உயிருக்கு ஆபத்து… மோடியையும் , அமித்ஷாவையும் சந்தித்து முறையிடுவேன்.. மதுரை ஆதீனம் பேட்டியால் பெரும் பரபரப்பு…

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட உள்ளதாக மதுரை ஆதீனம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி அப்பர் சப்பரத்தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று களிமேடு பகுதிக்குச் சென்ற மதுரை ஆதீனம், அப்பர் மடத்தினையும், விபத்து நடந்த தேரையும் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களை வைத்துக்கொண்டு, குத்தகைத் தொகையை தர முடியாது என ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும், உன்னால் ஊருக்குள் நுழைய முடியுமா??.. திருப்பணி செய்ய முடியுமா என்றும் ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய மதுரை ஆதீனம், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தார். மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு, ஒரு மதத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என்றும், ஒரு மதத்தை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்.. அது வெள்ளைக்காரர்களால் கூட முடியாதது.. இவர்களால் என்ன செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.