இந்தியாவிற்குள்ளும் வந்து விட்டது உருமாறிய ஒமிக்ரான் எக்ஸ்.இ.!!

கரோனா வைரஸின் எக்ஸ்.இ திரிபு இந்தியாவில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத் துறையின் ஆய்வு அமைப்பான இன்ஸாகாக் (The Indian SARS-CoV-2 Genomics Consortium) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஏப்ரல் 25-ம் தேதியிட்ட அந்த அறிக்கை நேற்று (மே 4) வெளியானது. எனினும், தொற்றுக்குள்ளானவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் எனும் தகவல்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.

‘கடந்த வாரத்தை ஒப்பிட 12 மாநிலங்களில் கரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 19 மாநிலங்களில் தொற்று குறைந்திருக்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கும் இன்ஸாகாக், இந்த இணைப்புத் திரிபின் மரபணுத் தொடர்வரிசை குறித்து ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

எக்ஸ்.இ’ திரிபு கரோனா வைரஸ் மும்பையில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டதாக, ஏப்ரல் 6-ம் தேதி தகவல்கள் வெளியாகின. எனினும், சில மணி நேரங்களிலேயே அதை மத்திய சுகாதாரத் துறை மறுத்தது. இன்ஸாகாக் அமைப்பும் இது குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியது. மும்பையில் தொற்று கண்டறியப்பட்டவரின் மாதிரியை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கரோனா வைரஸின் பல்வேறு திரிபுகள் அவருக்குத் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் இன்ஸாகாக் தெரிவித்தது. பல்வேறு திரிபுகளின் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை மரபணு தொடர்வரிசையை மீண்டும் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது என்று அந்த அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் ஜனவரி 19-ல் முதன்முதலாக எக்ஸ்.இ திரிபு கண்டறியப்பட்டது. இது பிஏ1 மற்றும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸின் இணைப்புத் திரிபு ஆகும். ஒருவர் பல்வேறு திரிபு கரோனா வைரஸ்களின் தொற்றுக்குள்ளாகும்போது இப்படியான இணைப்புத் திரிபு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒமைக்ரான் திரிபைவிட 30 சதவீதம் வேகமாகப் பரவக்கூடியது எக்ஸ்.இ திரிபு. எனினும், பெரும்பாலும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தாது என்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இதனால் பாதிப்பு குறைவு என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.