சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி : நடவடிக்கை எடுக்கப்படுமா ? – கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!!

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி : நடவடிக்கை எடுக்கப்படுமா ? – கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் 11.07.1907 ஆம் ஆண்டு நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர்களால் மாணவர்களின் நலன் கருதி நிதி வசூல் செய்து பாடசாலை கட்டப்பட்டது. விடுதலைக்கு பின்னர் நாளடைவில் அரசு பள்ளியாக மாறியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பள்ளியில் தற்பொழுது வரை பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று பல்வேறு இடங்களில், பல்வேறு பதவிகள் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்தல் பணிகள் தொடர்ந்து கிழக்கு பக்கம் உள்ள ஒரு கட்டிடம் மட்டும் பழுது பார்க்கப்பட்டது. தற்பொழுது மேற்கூரைகள் அதிகம் பழுதடைந்து மழை நீர் உள்ளே குளம் போல் தேங்கி உள்ளது. மழை நீர் கசிவால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத, பயன்படுத்த முடியாத நிலையில் பொருள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளது. மேலும் விடுமுறை மற்றும் மாலை நேரங்களில் அங்கு உள்ள மைதானத்திலும், சேதமடைந்த கதவுகள் ஜன்னல் வழியாக செல்லும் சமூக விரோதிகள் கஞ்சா, மது போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்தி அங்கு அப்படியே விட்டு செல்கின்றனர். மேலும் பள்ளியின் தண்ணீர் தொட்டி, குழாய், கதவு ஜன்னல் போன்ற பொருட்களை சேதப்படுத்தியும் செல்கின்றனர்.

இதனை மறுநாள் காலையில் வரும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதனை தூய்மைப்படுத்தி பின்பு தான் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்பித்து வருகின்றனர். இது குறித்து தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியர் புகார் கூறி உள்ளனர். புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்து சென்று உள்ளனர். பின்னரும் சமூக விரோதிகள் தொடர்ந்து அங்கு வந்து போதைப் பொருள்களை பயன்படுத்தி செல்வது தொடர்கதை ஆகி உள்ளது. எனவே காவல் துறையினர் தினமும் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள். மாணவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்படும். இந்த சிறப்புமிக்க பள்ளியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.