காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்களை தார் ஊற்றி அழித்த வாலிபர் கைது..!

கோவை மாநகரப் பகுதிகளில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் பொது இடங்களில் விளம்பரம் செய்யும் செயல்பாடுகள் குறையவில்லை. இதை தவிர்க்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு கட்டிட சுவர்கள், மேம்பாலத் தூண்களில் இயற்கை ஓவியங்கள், தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள், தேசத்தலைவர்கள் உருவ படங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காந்திபுரம் மேம்பால தூண்களில் தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய 5 பெருங்காப்பியங்களின் கதையை விளக்கும் விதமாக காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் காந்திபுரம் தூண்களில் வரையப்பட்ட சில ஓவியங்கள் மற்றும் பாதி வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மீது மர்ம நபர் ஒருவர் தார் ஊற்றி அழித்துள்ளனர். இதுகுறித்து காட்டூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்களை கருப்பு பெயிண்ட் ஊற்றி அழித்த ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவர் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான வேல்முருகன் விஸ்வ ஜன முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.