கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன் பறக்க தடை.!!

கோவை மாவட்டத்தில் கோவை – பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. கோவை தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியும், பொள்ளாச்சி தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக மகாலிங்கம் கல்லூரி உள்ளன . அந்த மையங்களில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் உள்ள பாதுகாப்பறையில் ( ஸ்ட்ராங் ரூம்) வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் போலீசாருடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பு கருதி ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் வகையில் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி காலை 6 மணி வரை (96 மணி நேரம்) அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி அதை சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை, ஆர்.எஸ். புரம் ,பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம் வடவள்ளி ,பி .என் புதூர் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.