கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.
இவர் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் மற்றொரு நண்பர் ஆண்டோ என்பவர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வெளியே சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து கார்த்திகேயனிடம் கொடுத்தார். அப்போது மோட்டார் சைக்கிள் டேங்கில் சேதம் ஏற்பட்டு இருந்தது. இதனை பார்த்த கார்த்திகேயன் இதுகுறித்து ஆண்டோவிடம் கேட்டார்.
அதற்கு அவர் தான் வெளியே சென்று இருந்த போது ரியாஸ் என்பவர் கல்லை எறிந்து மோட்டார் சைக்கிளில் சேதம் ஏற்பட்டதாக கூறினார். உடனே கார்த்திகேயன், ரியாசுக்கு போன் செய்து கண்டித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரியாஸ் அவரது நண்பர்கள் அர்ச்சகன் மற்றும் முனி ஆகியோரை அழைத்து கொண்டு கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தார். அங்கு 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ரியாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனின் தலையில் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த கார்த்திகேயனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கார்த்திகேயன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சகன், முனியை தேடி வருகின்றனர்.
Leave a Reply