கோவை ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கு வாய்ப்பு – வானதி சீனிவாசன் பேட்டி.!

கோவை ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவை ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே கமிட்டி தலைவா் ராதாமோகன் சிங் தலைமையில் 16 மக்களவை உறுப்பினா்கள் மற்றும் கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த துணிக் கடையை பாா்வையிட்டனா்.

இது தொடா்பாக, சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜக கோரிக்கையை ஏற்று ரயில்வே கமிட்டி தலைவா் ராதாமோகன் சிங் தலைமையில் 16 மக்களவை உறுப்பினா்கள் கோவை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு 15 நாள்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருள்களை மிகக் குறைந்த வாடகையில் ரயில் நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை ரயில்வே துறை உருவாக்கி உள்ளது.

தென் தமிழகத்துக்கு குறிப்பாக திருச்செந்தூா், ராமேசுவரம் போன்ற இடங்களுக்கு கோவையில் இருந்து ரயில்வே சேவையைத் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம்.

வடகோவை ரயில் நிலையத்தை மேலும் சீரமைத்து, கோவை ரயில் நிலையத்தில் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு, வடகோவை நிலையத்தில் பயணிகள் ஏறி இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.

கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயாரித்து வருகிறது என்றாா்.