துணைவேந்தர் மசோதாவுக்கு எதிர்ப்பு-விளக்கம் கேட்டு தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்தால் அது அரசியலுக்கு வழிவக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழக அரசின் தமிழக அரசின் துணைவேந்தர் மசோதா குறித்து தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தலைமைச் செயலருக்கு ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுடிவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், மாநிலத்தின் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி, துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் என். சந்திரசேகரனும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ஜி ரவியும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டி ஆறுமுகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், மூன்றாண்டு கால அளவுக்கு பதவி வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசைக் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற விவரங்கள் அந்த செய்திக் குறிப்பில் இடம்பெறவில்லை.

தமிழ்நாடு அரசின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக சட்டங்களின் படி, ஆளுநர் என்ற பதவியின் காரணத்தினால் (Ex- Officio Member) பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் இருந்து வந்தார். மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த பல்கலைக்கழகங்களின் இணை வேந்தராக இருந்து வந்தார். அரசைக் கலந்தாலோசித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்தார்.

இந்நிலையில், துணை வேந்தர் நியமனங்களில் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டமுடிவை திமுக அரசு கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியது. சட்டமுடிவு குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்தியோக உரிமை என்பது போல் செயல்பட்டு,உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது என்று தெரிவித்தார்.

அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்று முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையையும் சுட்டிக் காட்டினார். மேலும் , குஜராத், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல, தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பல்கலைக்கழகச் சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது”என்று தெரிவித்தார்.

எல்லாவற்றையும்விட, “இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை; மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை எனத் தெரிவித்தார். இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதியுள்ளார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஆளுநர் ரவி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்வது அரசியலுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.