நாளை ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: கோவையில் பூக்கள் விலை 3 மடங்கு உயர்வு..!!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள்
அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது.
பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா நாட்களில் பூக்கள் விலை மிக
உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைவாகவும் காணப்படும். இந்த நிலையில் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட
உள்ளது. இந்த பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின்
வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். மேலும் ஓணம் பண்டிகைக்காக கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 100 டன்களுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும்.

நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள், ஓணம் பண்டிகை என
தொடர்ச்சியாக வந்ததால், பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மழையின்
காரணமாக பூக்கள்வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது.
ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கோவை
பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
கேரளவில் இருந்தும் வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை
கொள்முதல் செய்து விட்டு செல்கின்றனர்.

இதனால் பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ
ஒரு கிலோ ரூ.4000, முல்லை ஒரு கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, செவ்வந்தி
(ஆரஞ்சு) ரூ.200, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160, வாடாமல்லி ரூ.200, தாமரை
ஒன்று ரூ.10, அரளி ரூ.250,போழி பூ ரூ.60, துளசி ரூ40, மரி கொழுந்து ரூ.50
(ஒரு கட்டு), நந்தியா வட்டம் ரூ.500 என விற்பனை செய்யப்பட்டது. தொடர் பண்டிகை நாட்கள் காரணமாக பூக்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக
வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.