பிஜீங்:சீனாவில் விபத்து நிகழ்ந்த விமானத்தில் இருந்த 132 பேரும் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன், எச்என்ஏ.
என அரசுக்கு சொந்தமான 4 விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 123 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 132 பேருடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. இது டெங்ஷியன் கவுண்ட்டியில் உள்ள வூஜோவை கடந்த போது, எதிர்பாராத விதமாக மலையில் மோதி தீப்பிடித்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் மலையில் மோதி, எரிந்து பள்ளத்தாக்கில் விழுந்ததை சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் விமானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 117 தீயணைப்பு வீரர்கள், 23 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், குவாங்சி கவுண்டியில் இருந்து 538 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று சிசிடிவி எனப்படும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.இது தவிர, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். எனினும், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டால்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீன அரசுக்கு சொந்தமான ஹீனன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ப்ரேயர் ஈஆர்ஜெ190-100 ரக விமானம் 44 பயணிகளுடன் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி ஈச்சூன் நகர விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எரிபொருள் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று எம்யூ5735 விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் வானில் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தலைகுப்புற விழுந்ததாக சில வீடியோக்கள் வெளியாகி உள்ளன. கீழே விழுந்தன விமானத்தின் முன்பகுதி மலையின் மீது மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக விமானத்தில் இருந்து யாரும் உயிர் தப்பியிருக்க முடியாது என கருதப்படுகிறது. இந்த விமான விபத்தை தொடர்ந்து இந்தியாவில் போயிங் 737 ரக விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்கள் அவ்விமானங்களை ஆய்வு செய்து கண்காணிக்குமாறு விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சீனாவின் குவாங்சியில் இருந்து 132 பேருடன் புறப்பட்ட எம்யூ5735 விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள், அவர்களது குடும்பத்தினரை எங்களது பிரார்த்தனையில் நினைவு கூருகிறோம்,” என்று கூறியுள்ளார்.
Leave a Reply