உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு 100 தன்னார்வலர்கள் சேர்ந்து முதலுதவி செயல்முறை விளக்கம்..!

சர்வதேச ரெட்கிராஸ் அமைப்பு முதலுதவி பயிற்சியை ஊக்குவிப்பதற்காக 2000 ஆம் ஆண்டு உலக முதலுதவி தினத்தை அறிமுகப்படுத்தியது.‌ ஒவ்வொரு ஆண்டும், உலக முதலுதவி தினம் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று, முதலுதவி பற்றியும் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றவும் முடியும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு, உலக முதலுதவி தினம் செப்டம்பர் 9, 2023 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள பலர் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பலர் உயிரை இழக்கிறார்கள். ஆனால் ஒரு நபருக்கு முதலுதவி பற்றிய அறிவு இருந்தால் தொழில்முறை உதவிக்காக காத்திருக்கும் போது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பேரழிவுகள் மற்றும் தினசரி அவசரநிலைகளின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க உதவும்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்களின் வழிகாட்டுதலில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் சார்பில் இன்று அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கில் 100 ஆப்தமித்ரா மற்றும் ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் முதலுதவி செய்யும் முறையினை ஒத்திகையாக வெளிப்படுத்தினர். அப்போது ஒருவரை மயக்க நிலையில் இருந்து காத்தல், எலும்பு முறிவு மற்றும் காயங்களுக்கு கட்டு போடுதல், அடிபட்டவர்களை சுமந்து செல்லுதல் மற்றும் மிகவும் அத்தியாவசியமான கார்டியோபுல்மோனரி மறுமலர்ச்சி (CPR) குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தியாகராஜன் அவர்கள்
முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனிநபருக்கும் அவசியமானது. பேரிடர் காலங்களிலும், விபத்து காலங்களிலும் கோல்டன் ஹவர் என சொல்லப்படும் நேரத்தில் முறையான முதலுதவி செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும், அத்தமித்ரா தன்னார்வலர்கள் அதற்கு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்றும், மாவட்டத்திற்கு அவர்கள் பெரிதும் உதவிகரமாக திகழ்வார்கள் என்றும் தெரிவித்தார். ரெட்கிராஸ் அமைப்பின் மூலம் முதலுதவி பயிற்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் திரு. ஜெயக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் திரு. பிரகதீஷ், ரெட்கிராஸ் பயிற்றுனர் திரு. சுரேஷ் குமார், வட்டாட்சியர் திரு. சக்திவேல், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் மற்றும் பொருளாளர் திரு. சேக் நாசர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.