குடியரசு தினத்தையொட்டி கோவையில் 1500 போலீசார் குவிப்பு..!

கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் என 1,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, புறநகரப் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் உட்கோட்டங்கள் வாரியாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர எல்லையில் உள்ள 11 சோதனைச் சாவடிகள், மாவட்டப் பகுதியில் உள்ள 16 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

அந்த வழியாக வரும் சந்தேகத்துக் குரிய வாகனங்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது:-
மாநகரில் பிரத்யேகமாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஓட்டல்கள், தனியாா் தங்கும் விடுதிகள், சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனிப் படையினா் ஒவ்வொரு தங்கும் விடுதி மற்றும் ஓட்டல்களுக்கு சென்று அங்கு தங்கியுள்ள நபா்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனா். இதில் சந்தேகப்படும் வகையிலான நபா்கள் தங்கியிருந்தால் மட்டுமே அவா்களிடம் விசாரணை நடத்தப்படும். தவிர, பகல், இரவு ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. முக்கிய பகுதிகள் டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ெரயில் நிலையம், காந்திபுரம் நகரப் பஸ் நிலையம், மத்தியப் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பிரத்யேக கருவிகள் மூலம் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும் வ.உ.சி மைதானம் மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வ.உ.சி. மைதானத்தையும் ட்ரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கோவை ரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் டி.எஸ்.பி யாஷ்மின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் ரெயில்வே போலீசார் , ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, போத்தனூர், வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரெயில் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் காலை, மாலை பிளாட்பாரங்களில் துப்பறியும் மோப்ப நாய், பிரத்யேக கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். பீளமேடு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.