நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக 2-வது வாரத்தில் தொடங்கியது. அதன்பின் கடந்த மாதம் வரை தீவிரமாக மழை பெய்து. இது வழக்கத்தைவிட 91 சதவீதம் அதிகம். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதுவரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த மழையால் அவலாஞ்சி, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை கொட்டித் தீா்த்தது. இதுவரை தென்மேற்கு பருவ மழையானது இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 3 போ் காயமடைந்துள்ளனா். 2 மாடுகள் இறந்துள்ளன. 128 மரங்கள் சாய்ந்தன. 258 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண தொகையும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அவற்றையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனா். மேலும், ஊட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகளில் காரட் மற்றும் பீட்ரூட் தலா 5 ஏக்கரிலும், தேயிலை 4 ஏக்கரிலும், கூடலூா் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை 2 ஏக்கரிலும் சேதமடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.