காரை வாடகைக்கு வாங்கி விற்ற காவலாளி உள்பட 2 பேர் கோவையில் கைது

காரை வாடகைக்கு வாங்கி விற்ற காவலாளி உள்பட 2 பேர் கோவையில் கைது

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்துவருகிறார்.
இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் மூலமாக காரை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் சொகுசு காரை வாடகைக்கு கடந்த 2020 – ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பியது. காரை பெற்று கொண்ட அஜித் 2 மாதங்கள் வாடகையாக சரியாக ரூ.80 ஆயிரத்தை கொடுத்தார். அதன் பின்னர் அவர் வாடகை தரவில்லை. காரையும் திருப்பி ஒப்படைக்காமல்
இருந்து வந்தார். மேலாளர் சரண் சக்திவேல், அஜித்தை செல் போனில் தொடர்பு கொண்ட போது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேரில் சென்று விசாரித்த போது அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அப்போது தான் சரண் சக்தி வேலுக்கு அவர் காரை பெற்று சோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்த அஜித்தை தேடி வந்தனர். சம்பவத் தன்று போலீசாருக்கு அஜித் அவர் வீட்டில் பதுங்கி இருந்தது
தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்க சென்று அஜித்தை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மொபைல் ஆப் மூலம் சரண் சக்திவேலிடம் வாடகைக்கு பெற்ற காரை அவர் முத்தையா என்பவருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்து. மேலும் இதேபோன்று பல்வேறு மொபைல் ஆப்களின் மூலமாக அவர் கார்களை வாடகைக்கு எடுத்து அதனை அடமானம் வைத்து ஜாலியாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் கார் வாங்கி விற்பதில் முத்தையாவிற்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் கடத்தப்பட்டதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார். அதன்படி அவர் உண்மையாக கடத்தப்பட்டாரா என்பது
குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.