மாசி மகம்… முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு.!!

மாசி மக பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான மக்கள் கும்பகோணம் மகா மக குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

மாசி மாத பௌர்ணமி மற்றும் மக நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் மாசி மக பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் மகா மக குளத்தில் நீராடினால், பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாசி மகப் பெருவிழா கடந்த 15 ஆம் தேதி சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி இன்று மகா மக திருக்குளத்தில் நடைபெறுகிறது. இத்திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் மகா மக குளத்தில் புனித நீராடி வருகின்றனர். மேலும் தங்களது முன்னோர்கள் ஆன்மா அமைதி பெற வேண்டி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.மாசி மக விழாவிற்கு முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீர்த்தவாரி நடைபெறும் நேரத்தில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் புனித புஷ்கர தொட்டியில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் நீராடி வழிபாடு செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும் நிலையில் திரளான பொதுமக்கள், கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூடர் வட காவிரி ஆற்றங்கரையிலும் இன்று ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.