மணிப்பூர் கலவரம்: மெரினா கடற்கரை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.!!

ல்லிக்கட்டு போராட்டத்தை போல் மீண்டும் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் வன்முறை கலவரம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசும் கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பல பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாக்கிய வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி பழங்குயிடின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை தொடர்பான வீடியோ சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஒட்டுமொத்த நாடும் தனது கண்டனத்தை பதிவு செய்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் குறிப்பாக தமிழ்நாட்டில் மணிப்பூர் வன்முறை கண்டித்து போராட்டங்கள் உரையாடல்கள் அதிகரித்துள்ளது.

மேலும் மாதர் சங்கங்கள், கல்லூரி மாணவர்கள் என்று பலரும் மணிப்பூரில் அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண்களை மானபங்கம்படுத்திய குற்றவாளிகள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் பெண்ணிய செயல்பாட்டாளர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொலைபேசியில் இருக்கக்கூடிய மின்விளக்குகளை உயர்த்தி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு மணிப்பூர் கலவரத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்று உளவுத்துறையினர் அறிவித்துள்ளனர்‌. இதையடுத்து நேப்பியர் பிரிட்ஜ் முதல் கலங்கரை விளக்கம் வரை மெரினா கடற்கரையில் அனைத்து பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணிநேர தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மெரினா கடற்கரையை சுற்றி வாகன சோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது..