திருப்பத்தூரில் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் – பாஜக நிர்வாகி கைது..!

திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பளாராக வினோத் உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே எஸ்.ஐ ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.ஐ ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்தனர். இந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் வருமாறு:- இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காற்றாலை பண்ணையின் பொது மேலாளரான பிரேசில் நாட்டை சேர்ந்த கார்லஸ் ஹெர்பர்ட் பாரோஸ் என்பவரை, ஒப்பந்த பணிகளை எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் அடியாட்களுடன் காற்றாலை அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கார்லஸ் ஹெபார்ட் பணகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணனின் மகன் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் உள்ளிட்டோர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்..