பணிப்பெண்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் அல்ல… அநாகரிகமாக நடக்கும் பயணிகள் மீது நடவடிக்கை தேவை- தமிழக மூத்த விமானி அட்வைஸ்..!

கோவை: சமீபத்தில் விமான பயணத்தின் போது பயணிகள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விமானிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கோவை வந்தபோது கூறியதாவது:-
சமீபத்தில் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தது, பணிப்பெண்களை கேலி செய்தது உள்ளிட்ட அநாகரிக செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுயஒழுக்கம், சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை மதித்து நடக்கும் மனிதநேயம் உள்ளிட்ட அடிப்படை நற்பண்புகளை பயணிகள் கடைபிடிப்பது அவசியம். விமானத்துறையில் எனது 19 ஆண்டு அனுபவத்தில், 18 ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கி உள்ளேன். பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. பெரும்பாலும் புகார்கள் அளிக்கப்படுவதில்லை.

காரோனா தொற்று பரவலுக்கு பின்னர் சர்வதேச விமானங்களில் பயணிகள் சிலர் அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அளவுக்கு அதிகமாக மது அருந்தி பயணிப்பது, சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் சண்டை போடுவது உள்ளிட்டவை தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்டங்கள் உள்ளபோதும் அதை அமல்படுத்துவது யார் என்பதில் விமான நிறுவனம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் அலட்சியம் காட்டுகின்றனர்.

விமான பணிப்பெண்கள், பயணிகளின் வீட்டில் வேலை செய்பவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அநாகரிக செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க அரசுதுறைகள் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் பயணிகள் மனநிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.