மும்பையில் பயங்கர கட்டட தீ விபத்து: 7 பேர் பலி-40 பேர் படுகாயம்..

இன்று அதிகாலை 3:05 மணியளவில் மும்பையில் உள்ள கோரேகான் வெஸ்டில் உள்ள மைதானம் மற்றும் ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 40 பேரில், 25 பேர் HBT டிராமா கேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், 15 பேர் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ மளமளவென பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கீழ் தளத்தில் உள்ள கடைகள், பழைய பொருட்கள் மற்றும் பல நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது முதலில் தீ பரவியது. அதன் பின் தீ அடுத்தடுத்து பரவியது. இதனால் வெளியேற முடியாமல் மொட்டை மாடி உட்பட பல்வேறு தளங்களில் மக்கள் தவித்தனர்.

இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகர் கூறுகையில், ‘2006-ம் ஆண்டு குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், தீயணைக்கும் அமைப்பு அங்கு இல்லை. லிப்ட் பழையது என்பதாலும், கணிசமான அளவு புகை லிப்ட் குழாய் வழியாக சென்றதாலும், மக்கள் வெளியேற முடியாமல் சிரமம் அடைந்தனர். காலை 6 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. எட்டு தீயணைப்பு வாகனங்கள், ஐந்து ஜம்போ தண்ணீர் டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக,’ கூறினார்.