கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிஎம்டிஏ அதிகாரி தலைமையில் 40 போலீசார் தினசரி ரோந்து..!

ண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்புக்காகவும் சிஎம்டிஏ அதிகாரி தலைமையில், 40 போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், வெளியூர் பயணிகளை குறிவைத்தும் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் கஞ்சா மற்றும் குடிபோதையில் போதை ஆசாமிகள் பேருந்து நிலையத்தில் தூங்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் போலீசார், பயணிகள் தவிர வேறு யாரும் இங்கு தூங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றனர். ஆனாலும் பலர் மதுபோதையில் தூங்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் சிலர் போதையில் பயணிகளிடம் தகராறு செய்வதை பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு அனுப்பினர். இது, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து நேற்று முன்தினம் சிஎம்டிஏ அதிகாரி லட்சுமி மற்றும் இணை ஆணையர் மனோகர், துணை ஆணையர் குமார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். பேருந்து நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை தவிர வேறு யாரும் தூங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தை கண்காணிக்க சிஎம்டிஏ செயற்பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் 40 போலீசார் ரோந்துபணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 31ம் தேதி வரை போலீசாரின் ரோந்து பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.