ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் .. இபிஸ் அறிவிப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று முதல் வரும் ஜனவரி 26ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்பதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற அதிமுகவின் இரு அணிகளும் மும்முரமாக இருந்தனர். குறிப்பாக பாஜக ஆதரவு எந்த அணிக்கு என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 23.1.2023 – திங்கட்கிழமை முதல் 26.1.2023 – வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கே.வி. ராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.