கேரள மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் வெற்றிபெற்ற பிறகும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது டெல்லி தலைமை.
தேர்தலில் தீவிரமாக செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முதல்வர் சீட்டுக்காக காய் நகர்த்துகின்றனர். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டுதலின்படி முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகமான இந்திரா பவனில் புதிய எம்.எல்.ஏ-க்களை சந்தித்து கருத்து கேட்டனர். அதில் மாநில தலைவர் சன்னி ஜோசப் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் கே.சி.வேணுகோபாலுக்கு ஆதரவாக கருத்து கூறியதாக ஒரு பட்டியல் வெளியாகி அதிர்வலையை கிளப்பியது. பின்னர் கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோரை டெல்லிக்கு அழைத்து அகில இந்திய தலைமை பேசியது. மேலும், இந்த மூவருக்கும் ஆதரவாக கேரளாவில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்றும்படி டெல்லி தலைமை கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை கேரள முதல்வர் யார் என டெல்லி தலைமை அறிவித்துவிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.






