ஜில்.. ஜில்.. ஜூஸ்.. குடிக்கும் முன் கவனி… கோவையில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்..!

 கோவையில் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள், பழ வகைகளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் பதநீர், இளநீர், கம்பங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் திரவ ஆகாரங்களின் தரத்தை, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கு.தமிழ்செல்வன் தலைமையில், அலுவலர்கள் அடங்கிய எட்டு குழுக்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், முக்கிய சாலைகளில் உள்ள பழச்சாறு கடைகள், குளிர்பான விற்பனை கடைகள், பேக்கரி, பானி பூரி கடைகள், தள்ளுவண்டி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்து டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது: மொத்தம் 270 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 38 கடைகளில் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருந்த 47 லிட்டர் குளிர்பானங்கள், 51 கிலோ பழ வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15,225 ஆகும். காலாவதியான நிலையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் குடிநீரானது தரச் சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருப்பது அவசியம். குளிர்பானங்களை நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்த வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் கரும்பு ஜூஸ் உள்ளிட்ட உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை, தயாரித்த பின் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது.

மேலும் அழுகிய பழங்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக் கூடாது. மிக்சி போன்ற பிழிப்பான்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களையும் சேர்க்கக் கூடாது.

பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ்கட்டிகளை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும். பூச்சி தடுப்பு முறைகளை பின்பற்றி, ஈக்கள், பூச்சிகள் மொய்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வணிகர்களுக்கு வழங்கியுள் ளோம்.

பொதுமக்கள் வாங்கும் உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்..