கேரளாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த யூத முறை திருமணம்.!!

கேரள மாநிலத்தில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஏராளமான யூத இனத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.

தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிக்கூடங்களாக மாறிவிட்ட காரணத்தினால் இங்குத் திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.

இந்நிலையில் கொச்சியைச் சேர்ந்த முன்னாள் காவல் அலுவலர் மகள் மஞ்சுளா மரியம் இமானுவேலுக்கும், அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை மணமக்களின் பெற்றோர் யூத முறைப்படி நடத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது கேரளாவில் இருக்கும் யூத ஆலயங்களில் இது போன்ற திருமணங்கள் நடப்பதில்லை என்ற காரணத்தினால், மணமக்களின் பெற்றோர் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் யூத ஆலயம் போன்ற கூடாரம் ஒன்றை அமைத்துள்ளனர்.

அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தை நடத்திக் கொடுப்பதற்காக இஸ்ரேலில் இருந்து மதகுரு வந்திருந்தார். அந்த மதகுரு முன்னிலையில் மணமக்கள் தங்களது மோதிரத்தை மாற்றிக் கொண்டு திருமணம் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதற்குப் பிறகு கெதுபா படித்து முடித்துவிட்டு, கண்ணாடியை உடைத்து திருமணப் பந்தத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் பாடப்பட்டு, நடனமாடி இந்த விழா நடத்தப்பட்டது. இந்த திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும்  கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்த உறவினர்கள், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த யூத முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குக் கழித்து இப்போதுதான் யூத முறைப்படி திருமணம் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.