சென்னை: எம்ஜிஆர் படத்தை முதல் நாளாக நான் பார்ப்பேன் என்றும் எம்ஜிஆருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பெரியப்பா என்ற உரிமையுடன் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று நிறைய புத்திமதிகளையும் கூறியுள்ளார் எம்ஜிஆர் என்றும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் எனும் நுழையும் வெளியிட்டார்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி இவ்வளவு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. அதற்கு எல்லோரும் காரணமாக இருந்தாலும் கல்லூரி உருவாகும் போது அதற்கு அடித்தளம் அமைக்க துணை நின்றவர் தலைவர் கருணாநிதி. நான் இங்கு வருவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்றார்.
மக்கள் திலகம் எம்ஜிஆரை படத்தில் மட்டும் பார்த்தவன் அல்ல.. தூரத்தில் இருந்து மட்டும் பார்த்தவன் அல்ல நான். அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. சத்யா ஸ்டுடியோவிற்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது நடந்த விழாக்களுக்கு நிறைய டொனேசன் வசூலித்த கொடுத்திருக்கிறேன்.
டொனேசன் டிக்கெட் எடுத்துக்கொண்டு நேராக நான் சத்யா ஸ்டுடியோவிற்குத்தான் வருவேன். அப்போது சூட்டிங் நடந்து கொண்டிருக்கும். மக்கள் திலகம் எம்ஜிஆரை சந்தித்து டிக்கெட் கொடுப்பேன். இருப்பதிலேயே காஸ்ட்லியான டிக்கெட் 250 ரூபாய் டிக்கெட் வாங்குவார். என் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் கொண்டவர் எம்ஜிஆர் அவர்கள். என்னுடைய பாட்டி அஞ்சுகம் அவர்களை அம்மா என்று பாசத்தோடு அழைப்பார். அடிக்கடி கோபாலபுரத்திற்கு வந்து பாசத்தோடு பழகுவார்.
எம்ஜிஆர் படம் ரிலீஸ் ஆகும் போது முதல் நாள் முதல் ஷோ பார்க்க முதல் டிக்கெட் கியூவில் நின்று வாங்குவேன். அவரது படம் ரிலீஸ் ஆன உடன் எனக்கு போன் செய்வார். நானும் வெளிப்படையாக பேசி அந்த சீன் சூப்பராக இருந்தது என்று சொல்வேன். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார். திமுக இளைஞரணி சார்பில் நடத்திய கூட்ட நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். முரசே முழங்கு என்ற நாடகம் மக்கள் திலகம் எம்ஜிஆர் தலைமையில் நடந்தது என்று மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பேசினார்.
என் மீது அளவு கடந்து பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் எம்ஜிஆர். நான் நன்றாக படிக்க வேண்டும் என்று எனக்கு புத்திமதிகள் கூறியிருக்கிறார் பெரியப்பா எம்ஜிஆர் என்றும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் அதிமுகவை விட திமுகவில் தான் அதிக காலம் இருந்தார். 1952 முதல் 1972 வரை திமுகவில் எம்ஜிஆர் இருந்தார். 1972க்கு பிறகு தான் அதிமுகவை தொடங்கினார். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி. உடல் வலிமை போன்று மனவலிமையும் முக்கியம் எனவும் கூறினார். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி உருவாக துணையாக இருந்தவர் கருணாநிதி என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எம்ஜிஆர், ஜானகி அம்மையார் இணைந்து நடித்த மருத நாட்டு இளவரசி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதி. மூன்று முதல்வர்கள் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர் என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின். ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசும் போது பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
Leave a Reply