சுப்மன் கில் சகோதரி விமர்சனம் விஸ்வரூபம் எடுத்தது… ஆர்சிபி ரசிகர்கள் – நடவடிக்கை எடுக்க டெல்லி மகளிர் ஆணையம் முடிவு..!

சுப்மன் கில் சகோதரியின் பதிவில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.

சுப்மன் கில்லின் சதம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இந்த வெற்றியின் காரணமாக, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. வெற்றி, தோல்வி ஆகியன விளையாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும், ரசிகர்களில் சிலர் ஆர்சிபி-ன் தோல்வியால் சமூக ஊடகங்களில் அவதூறாகப் பேசத் தொடங்கினர்.

அந்த வகையில், குஜராத் அணி வீரர் சுப்மன் கில்லின் சகோதரி ஷானீல் கூட சில ரசிகர்களால் அவமதிக்கப்பட்டார். குறிப்பாக போட்டிக்குப் பிறகு கில்லின் சகோதரி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் சிலர் வெறுக்கத்தக்க கமெண்ட்களை பதிவிட்டனர்.

இதனை தொடர்ந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், சுப்மன் கில்லின் சகோதரியை ட்ரோல் செய்த சில ட்விட்டர் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும், ‘நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வியடைந்ததற்காக சுப்மன் கில்லின் சகோதரியை ட்ரோல் செய்வது வெட்கக்கேடானது. விராட் கோலியின் மகளை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். இப்போது ஷானீலின் பதிவில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக மகளிர் ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்’ என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனியின் மகள்கள் குறித்து சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டதாக, டிசிடபிள்யூ அளித்த புகாரின் பேரில், கடந்த ஜனவரி மாதம், அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.