மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றார் ஜக்தீப் தன்கர் – பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 11-ம் தேதி நாட்டின் குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் பதவி ஏற்றார். அதன் பிறகு தற்போதுதான் முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று (டிச.7) குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றார். நாடாளுமன்றம் கூடியதும் மாநிலங்களவையில் தனது இருக்கைக்கு ஜக்தீப் தன்கர் வருகை தந்தார். அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை ஜக்தீப் தன்கர் தொடங்கினார்.

குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தன்கருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தன்கருக்கு மாநிலங்களவை சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் இந்த வாழ்க்கை நாட்டு மக்கள் பலருக்கும் உந்துதலாக இருக்கும். இந்த அவையின் மிக உயர்ந்த பொறுப்பை நீங்கள் வகிக்கிறீர்கள்.

நமது குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒரு விவசாயியின் மகன். அவர் படித்தது ராணுவப் பள்ளி. அந்த வகையில் அவருக்கு ஜவானோடும் (ராணுவ வீரர்) கிசானோடும் (விவசாயி) நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து, அம்ருத மகோத்சவ காலம் தொடங்கி உள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடி இருக்கிறது. அதோடு, ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடி இருக்கிறது.

நமது மதிப்புக்குரிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போதைய நமது குடியரசுத் துணைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன். சட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் மிக்கவர், நமது குடியரசுத் துணைத் தலைவர்.

எளிய முறையிலும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு நிலையான வளர்ச்சி இலக்குகளை நாம் அடைவதில் நமது நாடாளுமன்றம் உலகின் ஜோதியாகத் திகழும். மாநிலங்களவைதான் நாட்டின் மிகப் பெரிய பலம். பல்வேறு பிரதமர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள்’ என்று அவர் பேசினார்.

இதையடுத்து ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அரசியல் சாசனப்படி 2-வது உச்சபட்ச பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வரவேற்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். மாநிலங்களவை பல்வேறு யோசனைகளின் சங்கமம்” என்று தெரிவித்தார்.