இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9% ஆக உயர்வு – உலக வங்கி கணிப்பு..!

உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கு இந்தியா தற்போது மிகவும் நெகிழ்ச்சியான நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்தியா முன்னேற உதவுகின்றன என்றார். கொரோனா பாதிப்பின் போது சுருங்கிய இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மீண்டு வலுவாக உள்ளது.

கடந்த அக்டோபரில், நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது முந்தைய ஜூன் முன்னறிவிப்பிலிருந்து 1 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய அறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் வலுவான பொருளாதார நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயரும் என உலக வங்கி திருத்தப்பட்ட கணிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல், இந்தியாவின் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 7.41 சதவீதத்தில் இருந்து 6.77 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே இந்தச் சரிவுக்குக் காரணம்.